3917. |
வெங்கடுங்
காட்டகத் தாடல்பேணி |
|
விரிபுன்
சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத்
திசையார் பலிதேர்வார்
சங்கொடு
சாய லெழில்கவர்ந்த
சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற்
பரிதிந் நியமமே 6
|
6.
பொ-ரை: சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர்.
விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர். எல்லாத் திசைகளிலும்
சென்று
பிச்சையேற்றுத் திரிபவர். நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள்
சோர, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
திசை - திசைகளில். ஆர் - பொருந்திய (கிடைக்கக்
கூடிய) பலி தேர்வாராய். சங்கு, சாயல் - எழில். கவர்ந்த - உடம்பில் தங்காதவாறு
செய்த என்பது பொருள். புறவின் - முல்லை
நிலத்தையடுத்ததாகிய. சைவன் - சிவனுக்கு ஒரு பெயர் "சைவா
போற்றி தலைவா போற்றி" என்பது திருவாசகம்.
|