| 
         
          | 3918. | பிறைவளர் 
            செஞ்சடை பின்றயங்கப் |   
          |  | பெரிய மழுவேந்தி மறையொலி பாடிவெண் ணீறுபூசி
 மனைகள் பலிதேர்வார்
 இறைவளை சோர வெழில்கவர்ந்த
 விறைவர்க் கிடம்போலும்
 பறையொலி சங்கொலி யால்விளங்கும்
 பரிதிந் நியமமே.                     7
 |       7. 
        பொ-ரை: சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க, பெரிய மழுப்படையைக்
 கையிலேந்தி, வேதங்களைப் பாடி, திருவெண்ணீற்றினைப் பூசி
 வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார். அவர், என் முன்கையில்
 அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ, என் தோற்றப் பொலிவைக்
 கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பறை
 யொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்
 பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
      கு-ரை: 
        பின் தயங்க - பின்புறம் விளங்கித் தொங்க. மனைகள் - வீடுகளில். 
        இறை - முன் கையில் அணிந்த. வளை - வளையல்கள், சோர - நழுவ.
 |