3927. வானிடை வாண்மதி மாடந்தீண்ட
 

     மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங்
     கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை யைந்துகந் தாடினானை
     யமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மன்புதந்த
     நலமே நினைவோமே.                 5

     5. பொ-ரை: வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு
உயர்ந்த மாடங்களும், பக்கங்களில் கடலலைகள் மோதச்
சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்ட
உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர். இத்திருத்
தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச
கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய
சிவபெருமானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத
நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன்
அருள்புரிந்த சிறப்பினை அடையும் வண்ணம் அன்புடன் அவன்
அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக!

     கு-ரை: வான் இடை - ஆகாயத்தில். தீண்ட - அளாவ.
மருங்கே - பக்கத்திலே. கடல் ஓதம் - கடல் திரைகள் (மோத).
கான் - கடற்கரைச் சோலை. கண்டல் - தாழைகள். வாழும் -
செழிக்கும். அன்பு தந்த நலம் - பேருதவி. அமரர் தொழுது ஏத்த,
காரியப்பொருளில் வந்த வினையெச்சம்.