3929. கோலநன் மேனியின் மாதர்மைந்தர்
       கொணர்மங் கலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா
     தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய
     நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவ ரூழியென்று
     முணர்வைத் துறந்தாரே.               7

     7. பொ-ரை: அழகிய நல்ல மேனியுடைய மகளிரும்,
ஆடவரும்; காலமழை பொய்த்தாலும், பூசைக்குரிய மங்கலப்
பொருள்களை வழுவாது கொண்டுவந்து சேர்த்துப் பூசை நடத்தும்
சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும். அங்கு
வீற்றிருந்தருளுகின்ற நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு,
திங்கள், ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின்
திருவடிகளை வணங்கி, உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக்
காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர்.

     கு-ரை: மாதரும், மைந்தரும். கொணர் - பூசித்தற்குக்
கொணர்ந்த. மாங்கலியத்தில் வழிபடற் குரிய சிறந்த பொருள்களால்
கால மழை முதலியன பொய்த்தாலும் தமது பூசை சிறிதும்
குறையாதபடி பூசிக்கும் கலிக்காமூர். சிவன் -
மங்கலகரமானவன்.ஆகவே அவனைச் சேர்ந்த பொருள்களும்,
அவனுக்கு உரிய பொருள்களும் மங்களகரமாம். ஆதலால்
மாங்கலியம் என்பதற்கு - சிவனைப் பூசித்தற்குரிய பொருள்கள்
என்று பொருள். காரணப்பெயர். ஞாலம் - நிலம். வளி - காற்று.
ஞாயிறும் ஆய என உம்மையைப் பிரித்துக் கூட்டுக, அது எதிரது
தழுவிய எச்ச உம்மையாதலால் அட்டமூர்த்தங்களுள் ஏனையவும்
கொள்ளப்படும். அவை:- வான், நீர் மதி, உயிர் என்பன. ஓலமிடுதல்
- “ஆரூரா என்றென்றே யலறா நில்லே” (தி.6. ப.31. பா.3.)
“கற்றாமன மெனக் கதறிப் பதறியும்” (தி.8 போற்றித் திருவகவல்.
அடி.73.) ஓலமிடாதவர் ஊழி வாழினும் சிவஞானம் கைவரப்
பெறா என்பது ஈற்றடியின் கருத்து. உணர்வு - சிவஞானம்.