3930. ஊரர வந்தலை நீண்முடியா
       னொலிநீ ருலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும்
     பதியாங் கலிக்காமூர்
தேரர வல்குலம் பேதையஞ்சத்
     திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாத
     முடையா னிடமாமே.                  8

     8. பொ-ரை: ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட
முடியில் அணிந்து, ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும்
ஆண்டு, கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான்
வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம். அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை
மலையைப் பெயர்த்த இராவணன் அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி
தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும்.

     கு-ரை: ஆள்பவருக்கு முடி இன்றியமையாது வேண்டப்
படுதலின் ஊரும் பாம்பைத் தலையிற் சுற்றிய முடியால் உலகாண்டு
என்றார். “உலகாண்டு” என்பது “மண்ணுலகம் விண்ணுலகம் உம்மதே ஆட்சி” (தி.7.ப.46.பா.9.) ஆர் அரவம்பட - மிகக் கதற வைத்த
பாதம் உடையான்.