3933. ஆழியு ணஞ்சமு தாரவுண்டன்
       றமரர்க் கமுதுண்ண
ஊழிதொறும்முள ராவளித்தா
     னுலகத் துயர்கின்ற
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
     தமிழாற் கலிக்காமூர்
வாழி யெம்மானை வணங்கியேத்த
     மருவா பிணிதானே.                   11

     11. பொ-ரை: பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத்
தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும்
நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான். இவ்வுலகில்
உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய
இத்தமிழ்ப் பாமாலையால், திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில்
வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற,
அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா.

     கு-ரை: அமுதுண்ணவும் (அதனால்) ஊழிதோறும் உளரா(க) -
பல ஊழிகள்தோறும் சாவாமலிருக்கவும் அமரர்க்கு அளித்தான் -
(நஞ்சு அமுது ஆர உண்டு) தேவர்களுக்கு அருள் புரிந்தவன். பிணி
- உயிரைப்பற்றி நிற்பனவாகிய மலங்கள் மருவா.