3935. |
காரணி
வெள்ளை மதியஞ்சூடிக் |
|
கமழ்புன்
சடைதன்மேல்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந்
தழைய நுழைவித்து
வாரணி கொங்கைநல் லாள்தனோடும்
வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த
வுவகை யறியோமே. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான், கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச்
சூடி, இயற்கை மணம் கமழும் சிவந்த
சடைமேல் அழகிய கொன்றைமாலையையும், குளிர்ச்சி பொருந்திய
எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர். கச்சணிந்த
அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். ஊர்கள்தோறும் சென்று
அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம்
எங்ஙனம் அறிவோம்? அறிய இயலவில்லை.
கு-ரை:
கார் அணி - மேகத்துக்கு அழகுசெய்கின்ற. வெள்ளை
வெண்மையான. கமழ் - இயற்கையாக மணம் வீசுகின்ற, புன்சடை
தழைய - மகாதேவனாகிய சிவன் அணியப்பெறுதலால் என்றும்
வாடாத தன்மையுற . நுழைவித்து - செருகி, ந(ல்)லாள் தன்னோடும்
வலஞ்சுழி மேவியவர். ஊர் அணி - வரிசையான ஊர்கள்.
இன்னாமை வேண்டின் இரவு எழுக என்பவும், துன்புறுதற்குரிய
பலிகொண்டே மகிழ்ச்சியுறுவரானால், அவர் செய்கை சிற்றறிவோம்
எங்ஙனம் அறிவோம் என்பார், பெய்பலி கொண்டுகந்த
உவகையறியோமே என்றார்.
|