3936. பொன்னிய லுந்திரு மேனிதன்மேற்
 

     புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ
     வுரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும்
     வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க்
     குயர்வாம் பிணிபோமே.                3

     3. பொ-ரை: சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி
மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர். மின்னலைப்
போல ஒளிவீசும் சடைதாழ, யானையின் தோலை உரித்துப்
போர்த்தவர். ஆடும் பாம்பை அணிந்தவர். நிலைபெற்ற,
பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும்
திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு
எல்லா நலன்களும் உண்டாகும். நோய் நீங்கும்.

     கு-ரை: மின் இயலும் - ஒளி பொருந்திய, சடை, தாழ -
தொங்க. அரவு ஆட வலஞ்சுழிவாணராயிருப்பவர் என்க. உயர்வு
ஆம் - முத்தி எய்தும். உயர்வு ஆகுபெயர். உன்னிய சிந்தையின்
நீங்ககில்லார் என்றது “ஓயாதே உள்குவார்” என்ற கருத்து (தி.8
திருவாசகம்).