3944. வாழியெம் மானெனக் கெந்தைமேய
 

     வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
     கருத்தின் றமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லா
     ரவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரு மின்பமோக்கும்
     உருவும் முயர்வாமே.                 11

     11. பொ-ரை: எம் தலைவனும், தந்தையுமான, சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி,
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத்
தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை
ஏத்த வல்லவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த
இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர். ஊழிக்காலத்திலும்
நனிவிளங்கும் உயர்ந்த புகழடைவர்.

     கு-ரை: கருத்து இன்தமிழ் மாலை - சிறந்த பயனைத் தரும்
கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலை. தமிழ்மாலை ஏத்தவல்லார்க்கும்
அவர் சுற்றத்தாருக்கும் உருவும் உயர்வாம். (புகழுடம்பும்
உயர்வடையும்.) உயர்ந்த புகழ் அடைவர் என்பது கருத்து. ஏத்த
வல்லாரன்றி அவர் தமரும் உயர்வடைவரென்றது - “மூவேழ் சுற்றம்
முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி” (தி.8 போற்றித்
திருவகவல். அடி.. 118-119.) என்ற திருவாசகத்தாலும் அறிக.