3945. கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட
       கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லா
     னுமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த
     வம்மா னடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிட
     நாரை யூர்தானே.                     1

     1. பொ-ரை: கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான
நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி, திருமேனியில் திரு
வெண்ணீற்றினைப் பூசி, உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக்
கொண்டவர். முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு
மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான், தம்முடைய
அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத்
தொலைத்து மகிழ்பவர். இத்தகைய சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கடலிடை நஞ்சம் - கடலில் தோன்றிய நஞ்சம்.
உடலிடையில் - உடம்பில், பொடிபூசவல்லான். “நீறணிந்த கோலம்
நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான், அக்கோலம் தொழுவார்
உள்ளத்து நீங்காது நிற்றலான், ஆண்டுள்ளவினை நீறு ஆம்”
என்னும் திருக்கோவையா (தி.8)ருரை (118) இங்குக் கொள்ளத்தக்கது.
நடலை வினைத்தொகுதி - துன்பம் தரும் கன்மங்களின் கூட்டம்.
நடலை இப்பொருட்டாதலை. “நடலை வாழ்வு கொண்டு என்செய்தீர்
நாணிலீர்” என்னும் அப்பர்பெருமான் திருவாக்காலும் (தி.5.ப.90.பா.4.)
அறிக. பலதிறத்தான் வந்து தொகுதலின் கன்மம் வினைத் தொகுதி
எனப்பட்டது.