3957. வைதி கத்தின் வழியொழு காதவக்
  கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        2

     2. பொ-ரை: கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய
சிவபெருமானே! வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத
வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும், புத்தர்களையும் கூட்டி
வாது செய்து வெல்ல விரும்புகின்றேன். உமது திருவுள்ளம் யாது?
தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே! உலகனைத்தும்
உம் புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!

     கு-ரை: வைதிகம் - வேதத்திற் சொல்லும் நெறி. கைதவம் -
வஞ்சனை.காரமண் - நெற்றியில் நீறு பூசாமையாலும்,
நீராடாமையாலும், ஒளி குன்றிய தன்மையாலும் காரமண்
எனப்பட்டனர். எய்தி - நின்று.