3959. அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
  கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        4
 

     4. பொ-ரை: ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த
முதல்வனே! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும்
கொள்கைகளை வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து
அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது?
தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே!
உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும். திருவருள்புரிவீராக!

     கு-ரை: அறுத்த - வரையறுத்துக்கூறிய. அங்கம் ஆறு ஆயின
நீர்மையை - வேதத்தின் அங்கங்கள் ஆறு ஆயின தன்மையை.
கறுத்த - கோபித்த. “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள”
(தொல்காப்பியம் உரி இயல். 76.) வாழ் அமண் கையர்கள் -
வாழ்க்கையையுடைய அமணர்களாகிய கீழோர். வாழ் என்பது
பகுதியே நின்று தொழிற்பெயர் உணர்த்திற்று. செறுத்து - தடுத்து.
“செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்” (நாலடியார்.
222) முறித்த - வளைத்த. கண்ணி - தலைமாலை.