3960. அந்த ணாளர் புரியு மருமறை
 

சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயி லுறையுமெம் மாதியே.        5

     5. பொ-ரை: நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை
அணியும் வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே!
அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப்
பார்க்காத சமணர்களின் வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது
செய்ய உமது திருவுள்ளம் யாது? அழகிய திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே
மிக வேண்டும். திருவருள் புரிவீராக!

     கு-ரை: அந்தணாளர் - அந்தணர், “அந்தணாளன் உன்
அடைக்கலம் புகுத”. (தி.7.ப.55.பா.1.) என்றதும் காண்க. புரியும் -
செய்கின்ற. அருமறை - அரிய வேதக்கிரியைகளை, காரண
ஆகுபெயர். சிந்தை செய்யா - நினைத்துப் பார்க்காத. திறங்களை -
வலிமைகளை. சிந்த - சிதற.