3962. அழல தோம்பு மருமறை யோர்திறம்
  விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
     ஞால நின்புக ழேமிக வேண்டந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        7

     7. பொ-ரை: நெருப்புப் போன்று விளங்கும் சிவந்த
திருமேனியுடைய சிவபெருமானே! அழலோம்பி அருமறையாளர்கள்
செய்யும் காரியங்களைப் பயனற்றவை என்று கூறும் சமணர்களின்
பலவகைத் திறமைகளும் விலக வாது செய்ய எண்ணுகின்றேன். உமது
திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும்
எம்ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக
வேண்டுகின்றேன். திருவருள்புரிவீராக!

     கு-ரை: அழல் (அது) ஓம்பும் - அக்நி காரியங்களைச்
செய்துவரும். திறம் - தன்மை, விழலது - விழலின் தன்மையது;
பயனற்றது. விழல் - பயனற்ற ஒரு வகைப்புல். திறத்திறம் -
பலவகைப் பட்ட திறமைகள். திறம் - வகை. தன்மை “எத்திறத்து
ஆசான் உவக்கும்” என்பது நன்னூல். கழல - தங்கள்
சமயத்தினின்றும் விலக. சைவன் - சிவன்.