3963. நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.       8

     8. பொ-ரை: சிறந்த வாள்வீரனான இராவணனுக்கு மிக்க
அருள் புரிந்தவரே! திருநீறு பூசியவர் மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத வன்கண்மை பொருந்திய உள்ளமுடைய
சமணர்களின் பிழையைத் தெளிவித்து வாது செய்ய, உமது
திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம்
ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும்.
திருவருள்புரிவீராக!

     கு-ரை: திருநீறு பூசியவர்மேல் பட்டு வீசும் காற்றடிக்கும்
இடத்திலும் நில்லாத சமணர் என்பது முன் இரண்டடியின் கருத்து.
தேற்றி - அவர்கள் பிழையைத் தெளிவித்து. அரக்கர்க்கும் - இழிவு
சிறப்பும்மை. ஆற்ற - மிகவும். அருளினாய் - அருள் புரிந்தவனே
என்ற குறிப்பு தீமை செய்தவர்களுக்கும் பேரருள் புரியும்
பெருங்கருணைக் கடல். ஆகையினால் தீயவர்களாகிய அமணர்
திறத்தும் அக்கருணை காட்டின் சைவம் குன்றுமே என்னும் கருத்து.