3974. கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
  தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடையா ரூராதி யானைக்காவே.          8

     8. பொ-ரை: கடல்போலும் கருநிறமுடைய திருமாலும்,
பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின்
கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட
திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே
திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார்.

     கு-ரை: கடல் வண்ணன் - கடல்போன்று கரிய நிறத்தை
உடைய திருமால். தடவரையரக்கனைத் தலைநெரித்தார் - பெரிய
கயிலை மலையின் கீழ் இராவணனைத் தலையை நெரித்தவர். அடல்
விடை ஆரூர் - வலிய விடையை ஏறிய திருவாரூராம். ஆரூர்
என்பது ஆரூரர் என்னும் பொருளில் வந்துள்ளது.