3977. ஏனமா லயனவர் காண்பரியார்
  கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனவா ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் றமிழ்சொல்லுமே.            11

     11. பொ-ரை: பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும்
காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த
திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும்,
திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய
சிவபெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ்
மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப்
பெறுவார்கள்.

     கு-ரை: ஏனம் மால் - பன்றி உருவமெடுத்த திருமால். கானம்
ஆர் கயிலை - சோலைகள் சூழ்ந்த கயிலை. தமிழ் சொல்லுமே -
தமிழைப் பாடுவீர்களாக. பாடின் பெறலரும் பயன் பெறுவீர் என்பது
குறிப்பெச்சம். பதிகக்குறிப்பு:- ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்பட்டதாதலால் கூடற் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம்
என்பது வடசொல். ஒவ்பொரு பாடலிலும் திருமாலும் பிரமனும்
காணமுடியாதவர் என்று குறிக்கப்படுகிறது. திருமாலின் பல
தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன. நான்கு தலங்களையும்
சொன்னபோதிலும், ஒவ்வொரு பாசுரமும் “ஆனைக்காவே” என்று
முடிகின்றது. முதல் எட்டுப் பாடல்கள், ஆரூர் ஆதி (ஆனைக்கா)
என்றே முடிகின்றன. ஒன்பதாவது பாடல் “ஆரூர் எந்தை” என்று
முடிகின்றது. பத்தாவது பாடல் “கயிலையோன் ஆனைக்கா” என்று
முடிகிறது. பதினோராவது பாடல் இந்நான்கு தலங்களிலும்
எழுந்தருளியிருப்பவனது திருவானைக்காவை ஞானசம்பந்தன் பாடிய
தமிழ் என்று வருகிறது.