3978. வரமதேகொளா வுரமதேசெயும்
       புரமெரித்தவன் பிரமநற்புரத்
தரனனாமமே பரவுவார்கள்சீர்
     விரவுநீள் புவியே.                     1

     1.பொ-ரை: தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில்
பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த
அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப்
பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின்
புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற
பூமி முழுவதும் பரவும்.

     கு-ரை: வரம் அதே கொளா - வரம் பெற்ற பயனை
அடையாமல், உரம் அதே செயும் - தங்கள் வலிமைக்குரிய
தீங்கையே செய்த, திரிபுரங்களை எரித்தவனாகிய பிரமபுரத்திலுள்ள
சிவபெருமானின் புகழையே துதித்துப் போற்றும் அடியார்களின்
பெருமை இவ்வகன்ற பூமிமுழுதும் பரவும் என்பது இப் பாட்டின்
பொழிப்பு.