3982. காணியொண்பொருட் கற்றவர்க்கீகை
       யுடைமையோரவர் காதல்செய்யுநற்
றோணிவண்புரத் தாணியென்பவர்
     தூமதி யினரே.                       5

     5.பொ-ரை: நிலங்களையும், அறவழியில் ஈட்டிய
பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர்
விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க
நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய
பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய
சிவஞானம் பெறுவர்.

     கு-ரை: காணி - நிலங்களையும். ஒண்பொருள் - நல்
வழியால் ஈட்டிய பொருள்களையும், புலவர்களுக்குக் கொடை
கொடுக்கும் தன்மையுடையோர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணி
புரத்தின்கண் அரிய பொருளாய் இருப்பவனே என்று துதிப்போர்
தூய சிவஞானம் படைப்பர் என்பது ஈற்றுப் பகுதியின் பொழிப்பு.
ஆணி என்பதற்கு இரண்டாம் பாட்டில் உரைத்தது உரைக்க.