3998. துன்றுபூமகன் பன்றியானவ
       னொன்றுமோர்கிலா மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார்
     நன்றுசேர் பவரே.                     9

     9. பொ-ரை: இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ
பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானின் திருவடிகளை, பூவும்,
நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி பெறுவர்.

     கு-ரை: துன்று பூமகன் - (பூ துன்று மகன்) பூவில் வாழும்
பிரமன். சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று. மிழலையானடி -
அக் கடவுளின் திருவடிகளில். பூம் புனல் தூவினார் - பூவையும்
நீரையும் தூவினவர்கள். பூம் புனல் - பூவும் நீரும். பூவோடு நீர்
கூறுவதை “பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு” (தி.5.ப.90.பா.9)
எனவும், “போதொடு நீர் சுமந்தேத்தி” (தி.4.ப.3.பா.1) எனவும்
வருவன கண்டு அறிக. நன்று சேர்பவர் - முத்தி அடைபவர்.