3999. புத்தர்கைச்சமண் பித்தர்பொய்க்குவை
       வைத்தவித்தகன் மிழலைமாநகர்
சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண்
     மெய்த்தவத் தவரே.                   10

     10. பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்க்
குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான
சிவபெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் மீது சித்தம் வைத்து
வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.

     கு-ரை: கை - அற்பத்தனத்தை உடைய. சமண் பித்தர் -
பித்தர் ஆகிய சமணர். “ஏதம் கொண்டு ஊதியம் போக விடுதலின்”
பித்தர் என்பார். பொய்க்குவை வைத்த வித்தகன் - பொய்க்
குவியலாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த சாமர்த்தியசாலி.
வித்தகன் - ஞானசொரூபர்.