4018. ஓர்வரு கண்க ளிணைக்கயலே
       யுமையவள் கண்க ளிணைக்கழலே
ஏர்மரு வுங்கழ னாகமதே
     யெழில்கொளு தாசன நாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே
     நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே
     சிரபுர மேய தியம்பகனே.              7

     7. பொ-ரை: இறைவனையும், அடியாரையும் காணாத கண்கள்
புறம்பானவை. உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு
ஒப்பானவை. அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே.
அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது
நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது. நெடுஞ்சடையில்
தங்கியுள்ளது, கங்கையே. சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய
மூன்று கண்களையுடையவரே. நெருப்பாகிய அம்பைக் கையின்
இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து
அருளுகின்றார்.

     கு-ரை: ஓர்வு அரு கண்கள் - மாலற நேயம் மலிந்தவர்
வேடத்தை அரனென நினைக்காத கண்கள். இணைக்க -
அன்பரொடு மருவுதற்கு. அயல் - புறம்பானவை. வேடத்தைக் கண்டு
நினைப்பிக்கும் கருவியாகலான் கண்கள்மேல் வைத்து ஓதினாரேனும்,
மாந்தர்மேல் வைத்துக் கூறியதாகக் கொள்க. எனவே வேடத்தை
மதியாதவர் திருக்கூட்டத்திற்குப் புறம்பு என்ற கருத்தாம். உமையவள்
கண்கள், இணைக்கயல் - இரு மீன்களுக்கு ஒப்பாகும். ஏர் மருவும்
- அழகு பொருந்திய. கழல் - வீரக்கண்டையாக இருப்பது. நாகம்
அது - பாம்பாம். எழில் கொள் - அழகிய. உதாசனன் - அக்கினி.
ஆகம் அது - திருவுடம்பாக இருப்பது. நீர்வரு - நீர்மயமான.
கொந்து அளகம் - கொத்தான கூந்தல். கையது - ஒழுங்காய்
உள்ளது. கங்கையது - கங்கையாகிய மங்கைக்கு உரியது. ஒரு
மங்கையே நீர்மயமாக இருப்பாளேயானால் அவளது சாங்கமும்
நீர்மயமானதே என்று கொள்வதற்கு நீர்வரு கொந்தளகம் என்று
கூறினார். சேர்வரு - சேர்தற்கரிய. யோகம் - யோகநிலையைக்
காட்டிய. தியம்பகன் - மூன்று கண்களை உடையவன். தியம்பகன் -
திரியம்பகன் என்பதன் மரூஉ. சிரபுரம், மேய - எழுந்தருளிய. தீ -
நெருப்பாகிய. அம்பு - அம்பைக்கொண்ட. அகன் - கையினிடத்தை
உடையவன். தீ - குறுக்கல் விகாரமாய் தி என நின்றது. அகம் -
இடம்.