4020. நின்மணி வாயது நீழலையே
       நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே
     யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே
     கடல்விட முண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே
     வாரி வயன்மலி சண்பையதே.           9

     9. பொ-ரை: சிவபெருமானே! மணிகட்டிய உன் கோயில்
வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய
அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய். அவர்களின் அடிச்சுவட்டை
எண்ணி. மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே
அடியவர் திருக்கூட்டம் எனத்தகும். அவர் தாருகாவனத்தில் வாழும்
மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர். கடலில் எழுந்த விடத்தை
உண்ட கரிய கண்டத்தர். அப்பெருமான் நிலையாக விரும்பி
வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே
அழகாகச் சூழப் பட்டதாகிய கடல்வளமும், வயல் வளமும் உடைய
சண்பை நகராகும்.

     கு-ரை: நின்மணிவாயது - உமது ஆராய்ச்சி மணிகட்டிய,
கோயிலின் திருவாயிலினுடைய. நீழலையே - நிழலையே. நேசமது
ஆனவர் - விருப்பமாகக் கொண்டவர்; என்றது திருக்கோயிலில்
வழிபாடுசெய்து வாயிலில் காத்திருக்கும் அடியர் என்றபடி.
“மூவாவுருவத்து முக்கண் முதல்வ ...... காவாய் எனக் கடைதூங்கும்
மணி” என்ற அப்பர் வாக்கின்படி மணிவாய் என்பதற்குப் பொருள்
கொள்ளப்பட்டது. வாய் - வாயில். நீளலை (அவ்வடியவரினின்றும்)
நீங்கமாட்டாய். உன்னி மனத்து - மனத்தில் உம்மை நினைத்து. எழு
- எழுகின்ற. சங்க(ம)ம் - அடியார். ஒளியதனோடு - சைவ
தேஜஸோடு. உறு - வருகின்ற. சங்கமது - கூட்டமாகும். சங்கம்;
சங்கமம் என்பதன் மரூஉ. கடவுள் வெளிப்படும் நிலைகளாகிய குரு,
லிங்க, சங்கமங்களில் ஒன்று. கன்னியரை - முனிபத்தினியரை.
கவரும் - மனம் கவர்ந்த. களன் - கள்ளன். கடல்
விடமுண்ட, கருங்களன் - கரிய கழுத்தை உடையவன்.