4021. |
இலங்கை
யரக்கர் தமக்கிறையே |
|
யிடந்து
கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே
பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே
யெய்து பெயரு மிராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே
காழி யரனடி மாவசியே. 10 |
10.
பொ-ரை: இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன்
கயிலையைப் பெயர்த்து எடுக்க, இறைவன் திருப்பாத விரலை
ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு, இந்திரியங்கள் மயங்கச்
சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே
பாடினன். பழைய செருக்கு நீங்கி, பொறிகள் பக்தி நிலையில் செல்ல
அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன். இரவு
போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ்
நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம்.
இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம்.
சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும்.
கு-ரை:
இலங்கை அரக்கர் தமக்கு, இறை - அரசனாகிய
இராவணன். கயிலை(யை) இடந்து எடுக்க இறையே சிறிதளவில்.
புலன்கள் கெட - இந்திரியங்கள் எல்லாம் மயங்கச் (சோர்ந்து).
உடன் பாடினனே - (தான் பிழைக்கும் வண்ணம்) உடனே பாடினன்.
பொறிகள் - ஐம்பொறி முதலிய கரணங்கள். கெட - பழைய
செருக்குநிலைகெட்டு (பத்தி
நிலையில் செல்ல). உடன்பாடினனே -
அவனுடைய பாடலுக்கு இறைவர் உடன்பட்டவராகி. இலங்கியமேனி
இராவணன் - விளங்கின உடம்பையுடைய இராவணனுக்கு. எய்தும்
பெயரும் இராவணனே - அதனால் உண்டான பெயரும் அழுதவன்
என்பதாம். கலந்து அருள்பெற்றதும் மாவசியே - அருளிற் கலந்து
அவன் பெற்றதும் சிறந்த வாளாயுதமாம். (வசி - வாள்) வசி கூர்மை
வசியம் வாளே என்பது நிகண்டு. காழி அரன் அடி, மாவசி -
சிறந்த வசீகரத்தை உடையதாகும். வசி - முத்திபக்ஷாரம் என
செந்திநாதையர் உரைப்பர்.
|