4022. கண்ணிகழ் புண்டரி கத்தினனே
       கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே
     வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே
     நளிர்மலி சோலையி லெய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே
     பசுமிக வூர்வர் பசுபதியே.             11

     11. பொ-ரை: தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும்,
அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும்,
பூமியைத் தோண்டும் பன்றியாகவும், வானத்தில் பறக்கும்
பருந்தாகவும் அடி, முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர்.
குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப்
பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார், உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி
எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி
என்னும் பெயர் படைத்தவரும் ஆவார்.

     கு-ரை: கண் நிகழ் புண்டரிகத்தினனே - கண்ணானது
பொருந்திய தாமரையாக உள்ளவன்; தாமரைக் கண்ணனாகிய
திருமாலும். கலந்து - அவனோடு சேர்ந்து. இரி - திரிந்த.
புண்டரீகத்தினன் - (உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய) பிரமனும்.
மண் நிகழும் பரிசு - பூமியைத் தோண்டும் தன்மையை உடைய.
ஏனம் அதே - பன்றியாகவும். வானகம் ஏய் - ஆகாயத்தில்
பறக்கின்ற. சேனம் அது - கழுகாகவும். பிரமன் வானிற் பறக்க
எடுத்த வடிவம் அன்னமாகவும் எமது ஆளுடையபிள்ளையார்
வானிற் பறக்கும் கழுகாகவே திருச்சிற்றம்பலம் அதனைக் கூறினர்.
நண்ணி அடிமுடி எய்தலரே - சேர்ந்து அடி முடியையும்
அடையாதவர் ஆயினர். நளிர்மலி சோலையில் எய்து அலர் -
குளிர்ச்சிமிக்க சோலையில் உள்ள மலர்கள். பண் இயல் - சிவபூசை
பண்ணுதற்குப் பொருந்திய. கொச்சை - கொச்சைவயம் என்னும் தலத்திலுள்ள. பசுபதியே - ஆன்மவர்க்கங்களுக்குத் தலைவராய்,
அதனால் பசுபதி என்னும் பெயர் படைத்தவர். பசு - ஆனேற்றை.
மிக - என்றும். ஊர்வர் - ஏறுவார்; அதனால் பசு பதியே - பசுபதி
என்னும் பெயர் படைத்தவரும் ஆவர். பசுபதி - என்ற சொல்
பசுக்களுக்கு (ஆன்மாக்களுக்கு)ப் பதியாம் தன்மையாலும், பசு
ஏறுதலாலும், எய்திய பெயர் என்பது இங்குத் தெளிவிக்கப்பட்டது.