4024. |
பாயுமால்விடை
மேலொரு பாகனே |
|
பாவைதன்னுரு
மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொரு ணுண்பொரு ளாதியே
யாலநீழ லரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே. 1 |
1.
பொ-ரை: இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய
இடபத்தைச் செலுத்துபவர். உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒருபாகமாகக் கொண்டவர். தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின்
தொனியானவர். சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ
ஆனவர். ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும்
நுட்பமான கருத்தாக விளங்குபவர். ஆலநிழலின் கீழ்த்
தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்
பொருள் உரைத்த முதல்வர். போர்புரிய வந்த வில்லையுடைய
மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம். நெற்றிக்
கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருக்கச்சியேகம்பமே.
கு-ரை:
பாயும் மால் விடைமேல், ஒரு பாகன் - செலுத்து
பவன். பாவை - பெண்ணை.
தன் உருமேல் - தன் உடம்பின்மேல்.
ருபாகன் - ஒருபாகத்தில் உடையவன். வேதத்துவனி - வேதத்தின்
முழக்கம். மால் - பெரிய. எரி - எரிகின்ற. வேதத்து -
வெம்மையையுடைய. வனியே - நெருப்பே. எரிவன்னி - வினைத்
தொகை. வேது - வெம்மை. அத்து - சாரியை. ஆயும் -
ஆராயத்தக்க. நன் பொருள் - நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும்,
நுண்பொருள் - நுட்பமான கருத்தாக. ஆதி - ஆவாய். அரும்
பொருள் ஆதியே - கிடைத்தற்கு அரிய பொருளாயுள்ள முதல்வனே.
காய - போர் புரிய (வந்த). வில்மதன் - வில்லையுடைய மன்மதன்.
பட்டது - முதற்கண் அடைந்தது. கம்பம் - நடுக்கமேயாம். காய -
காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. காமன் பட்டது கம்பம்
என்பதை நந்தி தேவர் காப்பும் ஆணையும் உற்று நோக்கி
நெடிதுயிர்த்து உளம் துளங்கி விம்மினான் எனவரும் காம தகனப்
படலத்தான் அறிக. கம்பம்:- ஏகம்பம் என்பது கம்பம் என முதற்
குறைந்து நின்றது. ஏக + ஆம்பரம் = ஏகாம்பரம் - (ஒற்றை மாமரம்)
ஏகம்பம் என மருவிற்று. வேதத்து + வனி = வேத விதிப்படி
வளர்க்கப்பெறும் வேள்வித் தீ எனலே பொருந்துவது.
|