4027. |
முற்றலாமை
யணிந்த முதல்வரே |
|
மூரியாமை
யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே
பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே
வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த
முதல்வர்.வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர். ஒளி
பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர். பாலாலும்,
நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர். வற்றிய
மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர். தேவர்களாலும்
ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப்
பூசை செய்யப்படுபவர். அவரைப் போற்றாதவர்கள் மனம்
இரும்புத்தூண் போன்றது. அப்பெருமான் திருவேகம்பம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
முற்றல் ஆமை அணிந்த முதல்வர் - ஆமை ஓட்டை
அணிந்த முதல்வர். முதல்வர் - தலைவர். மூரி - வலிய. ஆமை -
ஆனேற்றை. அணிந்த - அழகு செய்து ஏறிய. முதல்வர் - முதலில்
தோன்றியவர். பரிசர் - தன்மை உடையவர். வாள் அரவு - ஒளி
பொருந்திய பாம்பை. பற்றி - பிடித்து. ஆட்டும் - ஆட்டுகின்ற.
பரிசர் - தன்மையுடையவர். ஆட்டும் - அபிடேகம் செய்யப்பெறும்.
பரிசர் - பெருமையையுடையவர். இனி வாளரவு ஆட்டும் பரிசர்
என்பதற்கு, போர்வீரர் கையிற் பற்றும் பரிசையைப் போலப்
பாம்பைப்பற்றி ஆட்டி வருபவர் என்ற கருத்தாகவும் கொள்ளலாம்.
வற்றல் ஓடு - வற்றிய மண்டையோடாகிய. கலம் - பாத்திரத்தில்
பலிதேர்வது (அவர்) பிச்சை யெடுப்பது. வானினோடு - தேவர்
உலகிலுள்ளவர்களுடன். கலம் (ஏனையுலகிலுமுள்ள) கலம் -
சற்பாத்திரங்களாகிய அடியார்கள். தேர்வது - ஆராய்வதும். பலி -
(அவருக்குச் செய்யும்) பூசை முறைகளையேயாம் (பலி - பூசை).
கற்றிலா - (அவரைக்) கல்லாத. மனம் - மனம். கம்பம் இருப்பு (அது) - இருப்புத் தூண்போன்றது.
|