4028. வேடனாகி விசையற் கருளியே
       வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே
     யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே
     குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே
     கம்பமாவதி யாவது மும்மதே.          5

     5. பொ-ரை: சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி
அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்டு
கண்டம் கறுத்தவர். ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி
அதன்மேல் ஆடை அணிந்தவர், பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால்
ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது. வளைந்த ஆகாயத்தில்
விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர்.
களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு
இனிமையானது. சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம்,
திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: விசயற்கு - அருச்சுனனுக்கு. அருளி - அருள்
செய்தோன். நஞ்சு, மிசையால் - உண்டலால். கருளி - (கண்டம்)
கறுப்பு அடைந்தவர். கருள் - கருமை. ஆடும் பாம்பு அரை
ஆர்த்தது உடையது - ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டிய
உடையின் மேலது. அஞ்சு பூதமும் - ஐம்பூத முதலிய
தத்துவங்களாலும். ஆர்த்தது - பிணைக்கப்பட்டதாகிய இவ்வுலகம்.
துடையது - அவரால் அழிக்கப்பட்டது என்றது உலகிற்குச் சங்கார
கருத்தா சிவன் என்பது. கோடு வான்மதி - வளைந்த ஆகாயத்தில்
வருகின்ற பிறையாகிய. கண்ணி - தலைமாலை. அழகிது -
அழகியதாக உள்ளது. குற்றம் இல் - களங்கமில்லாத மதி -
மெய்யடியார்களின். மதி - அன்போடு கூடிய அறிவால் வீசும்.
கண்ணி வலையானது, அழகிது - உணர்தற்கு இனிமையானது
என்றது. “பத்தி வலையிற் படுவோன்” என்ற கருத்து. காடுவாழ்
பதியாவதும் உம்மதே - சுடு காட்டில் வாழ்வது உமது
இருப்பிடமானால். கம்பமாபதி ஆவது உம்மதே - காஞ்சிபுரமாகிய
சிறந்த நகரமும் உம்முடையது என்று சொல்லலாகுமா? என்றது.