4029. |
இரும்புகைக்கொடி
தங்கழல் கையதே |
|
யிமயமாமக
டங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே
யாழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகனட மாடுதல் செய்துமே
பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே. 6 |
6.
பொ-ரை: இறைவர் கொடி போன்று பெரிய புகையுடன்
எழும் நெருப்பைக் கையிலேந்தியவர். இமயமலையரசனின் மகளான
உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன.
அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும், மலர்களையும்
பாரமாகத் தாங்குபவர். சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய
உடலெலும்பாகிய
கங்காளத்தைச் சுமப்பவர். பகலில் திருநடனம்
செய்பவர். தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர்.
கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும்
திருக்கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுபவர்.
கு-ரை:
இரும் - பெரிய (புகைக்கொடி தங்கு). அழல் -
நெருப்பு. கையது - கையின் கண்ணது. தம்கழல் - தமது திருவடி.
இமய மாமகள் - உமாதேவியாரின்.
கையது - கையால் வருடப்
படுவது. மாலைதாழ் குழல் மாமலையாள் செங்கை சீலமாக வருடச்
ிவந்தன என்னும் தடுத்தாட் கொண்ட புராணக் (192) கருத்து.
அரும்பும் - அரும்புகளும். மொய்த்த - வண்டுகள் மொய்க்கப் பெற்ற.
மலர் - மலர்களும். பொறை - பாரமாக. தாங்கி - தாங்கினவன்.
அன்பரிட்டமையாகலின் பொறையாயினுந்தாங்கினான் எம்போலிகள்
பறித்திட்ட அரும்பும் பூசைக்காதல் அறிக. ஆழியான்தன் -
திருமாலின் மலர். பரந்த - பெரிய. பொறை - உடலெலும்பாகிய
கங்காளத்தை. தாங்கி - சுமப்பவன். (உடல் எலும்புக் கூட்டுக்குக்
கங்காளம் என்று பெயர்). கங்காளம் தோள்மீது காதலித்தான்
காணேடி என்பது திருவாசகம் (தி.8). திருமாலின் திருவிக்கிர
மாவதாரத்திற் செருக்கையடக்கி அதற்கறிகுறியாக அவன்
உடலெலும்பைச் சிவபெருமான் தாங்குவர். ஏனையரெவரும் அழிவர்
எனலை விளக்குதற்குக், கண்டவிடம் நித்தியத்தைக் காட்டவும்
கங்காளம் முதல், அண்டவிடந்தர வைத்தாய் அம்புயம் செய்குற்றம்
எவன் என்னும் வாட்போக்கிக் கலம்பகத்தால் அறிக. பெரும் பகல்,
நடம் ஆடுதல் செய்தும், பேதையர் மனம் - தாருகவனத்து
முனிபத்தினிமார் மனம். வாடுதல் செய்தும் - வாடச் செய்தீர் என்றது
திருக்கூத்து. எவருக்கும் மகிழச் செய்விப்பதாகவும், பேதையரை
மட்டும்வாட்டியது என்பது புதுமை என்ற கருத்து. செய்தும் - செய்தீர்.
தன்மை முன்னிலைக்கண் வந்தது. அது நாமரையாமத்தென்னோ
வந்து வைகி நயந்ததுவே என்ற திருக் கோவையாரிலும் (தி.8)
நடந்தவரோ நாம் என்னக் கம்பராமாயணத்தும் வருதல் காண்க.
செறிந்து ஓங்கிய தூண்கள் போலக் கரும்புகள் இருக்கும் காஞ்சியில்
ஏகாம்பரம் உன் இருப்பிடம்.
|