4030. |
முதிரமங்கை
தவஞ்செய்த காலமே |
|
முன்புமங்கை
தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்தமு ருட்டியே
வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே
யானையாடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே. 7 |
7.
பொ-ரை: மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை
முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத்
தவம் செய்தாள். பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும்
இக்காலத்திலும் மூங்கில், அகில், சந்தனம், மற்றும் ஏனைய முருட்டு
மரங்களையும், யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு
ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துத்கொண்டு வர,
பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத்
தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில்
விளங்குகின்றது. அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள
திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
முதிரம் மங்கை - மேகம் போலும் நிறத்தையுடைய
அம்பிகை. தவம் செய்த - இமயமலையில் இளமைப்பருவத்தே
சிவபிரானைக் கணவராகப் பெறத் தவம் செய்த. காலம் முன்பும் -
முற்காலத்திலும். (அம்பிகையைக் கிழவடிவம் கொண்டு
பரிசோதித்தற்கு வந்ததுபோலவே) மங்கை தவம் செய்த காலம் -
அம்பிகை கம்பையாற்றில் தவம் புரிந்த இக்காலத்திலும், (ஆற்றைப்
பெருக்கிப் பரிசோதித்தலாகிய) அம் கைதவம் செய்தகாலம் -
அழகிய வஞ்சனை செய்ய வந்த சமயத்தில். கைதவம் - நன்மையை
விளைக்க வந்தமையின், அழகிய என்று விசேடிக்கப்பட்டது.
வெதிர்களோடு அகில் சந்தம், முருட்டி - மூங்கில் மரங்களோடு,
அகில், சந்தன மரங்களையும், (ஏனைய) முருட்டு மரங்களையும்,
வேழம் - யானை முதலிய மிருகங்களை. ஓடகில் சந்தம் - ஓட
முடியாதபடி. உருட்டி - உருட்டிக் கொண்டு. அதிர -
ஒலிக்கும்படியாக. ஆறு - கம்பையாறு. அழுவத்தொடே -
பரப்போடு. வரத்து - வருவதால். (வரத்து - தொழில்பெயர்
மூன்றனுருபுத் தொகை) ஆன் ஐ ஆடுவர - பஞ்ச கவ்வியம்
அபிடேகம் கொள்வோராகிய சிவபெருமானை. (இரண்டனுருபாகிய
ஐ செய்யுளாதலின் அகரமாகத் திரிந்து நின்றது). தழுவத்தொடே -
தழுவத் தொடுதலால் (தொடு - முதனிலைத் தொழிற்பெயர்). முலை -
முலைத் தழும்பு. (காரண ஆகுபெயர்). கம்பம் - தம்பம்போல்
உறுதியான அவர்மார்பில் இருப்பது.
|