4035. ஆலநீழ லுகந்த திருக்கையே
       யானபாட லுகந்த திருக்கையே
பாலினேர்மொழி யாளொரு பங்கனே
     பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே
     கோதிலார்மன மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே
     யாலவாயுறை யண்டர் களத்தனே.        1

     1. பொ-ரை: சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி
இருப்பிடமாகக் கொண்டவர். அவருக்கு விருப்பமான பாடல்
இருக்குவேதமாகும். அவர் பால் போன்று இனிய மொழி பேசும்
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். தம் திருவடிகளைப்
போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர். அழகிய
திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர்.
குற்றமற்றவர்கனின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர்.
ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர். தேவர்கட்கெல்லாம்
தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: ஆலம் நீழல் - கல்லாலின் நீழலில். உகந்தது -
விரும்பியது. இருக்கை - இருப்பிடம். இருக்கை - வேதத்தை. ஓர்
பங்கன் - ஒரு பங்கில், இடப்பாகத்தில் உடையவன். பாதம் ஓதலர்
சேர் புரபங்கன் - தமது திருவடியைத் துதியாதவராகிய அசுரர்
இருந்த திரிபுரத்தை அழித்தவன். கோலம் நீறு அணி - அழகிய
திருநீற்றைப் பூசிய. மேதகுபூதனே -சிறந்த பூதகணங்களை
உடையவனே. கோது இலார் - குற்றமற்ற அடியாரது. மனம் மேவிய
- மனத்தின் கண் தங்கிய. பூதன் - உயிர்க்கு உயிராய் இருப்பவனே.
பூதம் - உயிர். ‘பூதம் யாவையின் உள் அலர் போதென’ எனவரும்
சேக்கிழார் திருவாக்கால் அறிக. (தி. 12 திருமலைச் சிறப்பு பா. 33)
களத்தன் - கண்டத்தை உடையவன். அண்டர்கள் அத்தன் -
தேவர்களுக்குத் தந்தை. மேவி அபூதனெனலே பொருந்துவது -
பொருந்திக் காணப்படாதவன்.