4036. பாதியாவுடன் கொண்டது மாலையே
       பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதினீறது பூசிடு மாகனே
     கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதனாடொறு மாடுவ தானையே
     நாடியன்றுரி செய்தது மானையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே
     விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே.       2

     2. பொ-ரை: சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக்
கொண்டது திருமாலை. பாம்பும், கொன்றை மலரும் அவருக்கு
நன்மாலைகளாகும். குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர்.
இடத் திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர். அவர் நாள்தோறும்
அபிடேகம் கொள்வது பஞ்ச கவ்வியத்தால். அவர் உரித்தது
யானையை. வேத நூல்களை அருளுவது அவரது திருவாய்.
விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய்.

     கு-ரை: பாதியா - உடம்பில் பாதியாக. மாலை - திருமாலை.
(சங்கர நாராயண வடிவம்) ஆகன் - மார்பை உடையவன் கையில்
மான்இடம், ஆகன் - ஆகியவன். ஆகு + அன் = இரண்டு உறுப்
பால் முடிந்த பகுபதம். ஆடுவது ஆன் ஐ - அபிடேகம் கொள்வது
பஞ்சகவ்யம். உரிசெய்ததும் - உரித்ததும். வேதநூல் பயில்கின்றது -
வேதநூலைப் படிப்பது. வாயிலே - தமது திருவாயினால். விகிர்தன்
ஊர் நல் திருவாலவாயில் - ஊராக இருப்பது நல்ல திருவாலவாயில்.