4040. நக்கமேகுவர் நாடுமோ ரூருமே
       நாதன்மேனியின் மாசுண மூருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே
     தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் றேவிக் கணியையே
     மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே
     யாலவாயர னாருமை யோடுமே.          6

     6. பொ-ரை: சிவபெருமான் நாடுகளிலும், ஊர்தோறும்
ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார். அவர்
திருமேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும். திருநீலகண்ட
யாழ்ப்பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ,
அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி
அமரச் செய்தார். தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு
மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர்.
திருத்தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர். எலும்புமாலை
அணிந்துள்ளவர். மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர்.
அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: நாடும் - நாடுகளிலும். ஓர் ஊரும் - ஒவ்வொரு
ஊர்தோறும். நக்கம் ஏகுவர் - ஆடையில்லாத கோலத்தோடு
பிச்சைக்குச் செல்வர். மேனியில் - திருமேனியில். மாசுணம் - பாம்பு.
ஊரும் - ஊர்ந்து கொண்டிருக்கும். “தக்க பூமனைச் சுற்றக்
கருளொடே தாரமுய்த்தது பாணற்கருளொடே” என்றது
திருவாலவாயில் தரிசிக்க வந்த திரு நீலகண்டயாழ்ப்பாணரைக்
கோயிலுக்கு அழைத்துவரும்படி அடியார்களுக்குச் சிவபெருமான்
கனவில் ஏவ, அவ்வாறே வந்து அவர்பாடும்பொழுது அவர்க்குப்
பொற்பலகை தந்த திருவிளையாடலைச் சம்பந்தப்பெருமான்
அருளிச்செய்தது. தக்க - சிறந்த. பூ - பொலிவுற்ற. மனை -
திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்கியிருந்த மனையில். சுற்ற - அடியார்
சுற்றிக்கொண்டு அழைக்க. அருளொடு - இரவில் கனவில்
அவர்களுக்கு அருளியபடி. பாணற்கு - அவ்வாறு வந்து கோயிலில்
பாடிய திரு நீலகண்ட யாழ்ப் பாணர்க்கு, அருளோடு உய்த்தது -
அருளோடு செலுத்தியது. தாரம் - உயர்ந்த பொருளாகிய
பொற்பலகை. கருள் - கருமைநிறம். மும்மடியாகு பெயராய் வந்தது.
கருமை இருட்டுக்கானது பண்பாகு பெயர். இரவுக்கானது தானியாகு
பெயர். இரவு, கனவிற்கானது காலவாகுபெயர். இவ்வரலாறு பெரிய
புராணத்தில் “தொண்டர்க்கெல்லாம் மற்றை நாட் கனவில் ஏவ,
அருட்பெரும் பாணனாரை தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு
கொண்டு புக்கார்” “மாமறை பாடவல்லார் முன்பிருந்து யாழிற்கூடல்
முதல்வரைப் பாடுகின்றார்” “பாணர் பாடும் சந்தயாழ் தரையில் சீதம்
தாக்கில் வீக்கு அழியுமென்று சுந்தரப் பலகை முன் நீரிடுமெனத்
தொண்டர் இட்டார்” எனக் கூறப்படுகிறது. (தி.12 திருநீலகண்டயாழ்ப்
பாண நாயனார் புராணம் பா.3,4,6.) சேக்கிழார் பெருமான்
இப்பதிகத்து ஆறாம்பாடலில் திருஞான சம் பந்தப் பிள்ளையார்
திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் குறித்தனர் என்பதை “திருவியமகத்தினுள்ளும் திரு நீலகண்டப்பாணர்க்கு அருளிய
திறமும் போற்றி” என அருளிச் செய்கின்றார். (தி.12
திருஞானசம்பந்தர் புராணம் பா.870) பாணற்கு - திருநீலகண்ட
யாழ்ப்பாணர்க்கு. அருளொடு - கிருபையோடு. தென்னவன் தேவி -
மங்கையர்க்கரசியார்க்கு. அணியை - மங்கிலியம் முதலிய
ஆபரணங்களை, மெல்ல நல்கிய - மெல்லக் கொடுத்தருளிய என்றது
“பாண்டி மாதேவியார் தமது பொற்பின் பயிலும் நெடுமங்கல நாண்
பாதுகாத்தும் பையவே செல்க” என்று இக்கருத்தைச் சேக்கிழார்
சுவாமிகள் விளக்குகிறார்.