4041. வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே
       வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே
     யன்பினால்நினை வார்க்கருண் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே
     வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே
     யாலவாயரன் கையது வீணையே.         7

     7. பொ-ரை: சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்து
கையால் குட்டி. அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய
பாம்புக்குட்டி. அவரே தலைவர். அனலில் ஆடும்
திருமேனியுடையவர். அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு
அருள் வழங்கும் மெய்யர். உலகமுய்ய அன்று அவர் உண்டது
விடமே. வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர்
கையில் விளங்குவது எலும்புக்கூடே. அவர் பிச்சை ஏற்பதாக
உலகோர் உரைப்பது வீண் ஆகும். திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே.

      கு-ரை: வெய்யவன் - சூரியன். பல் உகுத்தது குட்டி -
பல்லை உதிர்த்தது கையால் குட்டி. கையது - கையில். வெங்கண் -
கொடிய. மாசுணங்குட்டி - பாம்புக்குட்டி. கையது - கையில்
இருப்பது. அனலாடிய மெய்யனே - நெருப்பில் ஆடிய உடம்பை
உடையவன். அருள் மெய்யன் - நிச்சயமாக அருள்பவன். காளம் -
விடத்தை. வள்ளல் - கடவுளது. கையது - கையில் இருப்பது. மேவு
கங்காளம் - பொருந்திய எலும்புக் கூடு. ஐயம் ஏற்பது - பிச்சை
எடுப்பதும். வீண் - பயனற்றது.