4042. தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே
       தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்க னிலத்துக் களித்துமே
     வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே
     நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ
     வாலவாயர னுய்த்தது மெய்கொலோ.     8

     8. பொ-ரை: வாளைக் கையிலேந்திய இராவணன் தன்
இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு
திக்குவிசயம் செய்து, தன்னை எதிர்க்க வந்த தேவர்களின்
வலிமையை மயங்கச் செய்து, இப்பூவுலகில் களித்து நிற்க, தன்
தேரைத் தடுத்த கயிலை மலையைக்கண்டு வெகுண்டு பாய்ந்து
சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன்.
அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற, இராவணனின்
தலை நெரிய, அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான்.
உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின்
உடலை முறியச் செய்தது மெய்கொல்? திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் அரனே! பின்னர் அவனது பாடலைக் கேட்டு
அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ?

     கு-ரை: தோள்கள் பத்தொடு பத்து மயக்கி - இருபது தோள்
வலிமையையும் சேர்த்து. தேவர் செருக்கை, மயக்கி - மயங்கச்செய்து
(அழித்து) இது திக்குவிசயம்பண்ணின காலத்தின் நிகழ்ச்சி. வந்த -
தன்னைக் தடுக்க வந்த (வந்த - நின்ற என்னும் பொருட்டு) உகளித்து - துள்ளி (உகள் - பகுதி) உன்மத்தன் - ஒன்றும் தெரியாதவன் ஆகி. நின்விரல் தலையால் - உமது விரல் நுனியால். மதம் - தனது மதம்.
அத்தன் - அழிந்தவனாகி. ஆளும் - அனைத்து உலகையும்
ஆளுகின்ற. ஆதி - முதல்வராகியதாம். முறித்தது - முறியச் செய்தது. மெய்கொலோ - அவனது உடம்பைத் தானோ? ஆலவாய், அரன் -
அரனே! உய்த்ததும் - வரங்கொடுத்து அவனை மீளச் செலுத்தியதும்.
மெய்கொலோ - உண்மையான வரலாறு தானோ?