4045. ஈனஞானிக டம்மொடு விரகனே
 

     யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுண் ஞானசம்பந்தனே
     யாலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினு ளத்தனே
     யன்பரானவர் வாயினு ளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே
     வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.      11

     11. பொ-ரை: தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே.
அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே! நல்லறிவு
அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே. பல பொருள்களை அடக்கிய, முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த
ஞான சம்பந்தர், திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய்
அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும்
ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்.

     கு-ரை: ஈனஞானிகள் தம்மொடு விரகனே - அறிவிலிகளுடன்
சேராத சூழ்ச்சியை உடையவன். விரகு - சூழ்ச்சி. ஏறுபல்பொருள் -
பல பொருள்களை அடக்கிய. முத்தமிழ்விரகன். சம்பந்தன் -
உரிமையுடையவன். ஆன - பொருந்திய. வானவர், வாயினுள் -
வாயினுள் துதிக்கப்படுகின்ற. அத்தன் - சர்வலோகநாயகன்.
அன்பரானவர் - அடியார்களுக்கு. வாய் - வாய்த்த. இன் - இனிய.
உளத்தன் - உள்ளத்தில் இருப்பவன்.