4046. துன்றுகொன்றைநஞ் சடையதே
       தூய கண்டநஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே
     கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே
     யென்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே
     நீரெனைச் சிறிது முள்ளுமே.            1

     1. பொ-ரை: சிவபெருமான் நெருங்கிய கொன்றைமலரைச்
சூடியுள்ளது சடையில். அவருடைய தூயகழுத்து நஞ்சை
அடக்கியுள்ளது. மான்கன்றை ஏந்தி உள்ளது இடக்கை.
இமயமலையரசன் மகளான மான் போன்ற உமாதேவியைக்
கொண்டுள்ளது இடப்பக்கம். அவர் என்றும் ஏறும் வாகனம்
இடபமே. பிச்சாடனரான நீர் நான் பிச்சையிட என்னிடத்து
வருவீராக. நீர் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில், அதுபோல அடியேன் உள்ளத்திலும் எழுந்தருள
நினைப்பீராக!

     கு-ரை: நம் - உமது. இடவழு அமைதி. (காண்க: தி.3 ப.114.
பா.6.) நஞ்சு அடையது - நஞ்சு அடைதலை உடையது. அடை -
முதல் நிலைத் தொழிற்பெயர். கன்றின் மான் - மான் கன்று,
இடக்கையது. கல்லின் - இமயமலையின். மான் - மகளாகிய மான்
போன்ற உமாதேவியார். இடம்கைஅது - இடப்பக்கத்தில் இருப்பது.
மான் என்பதற்கு ஏற்ப கையது என ஒன்றன் பாலால் முடித்தார். கை
- பக்கம்.