4048. பாடு கின்றபண் டாரமே
 

     பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே
     தொழுத வென்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே
     நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே
     நாக நஞ்சழலை யூருமே.               3

     3. பொ-ரை: சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற
பண்தாரம் என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே. பக்தர்கட்கு
ஞானக்கருவூலமாய் விளங்குபவர். அவர் சூடுவது ஊமத்த மலர். அவரை வணங்கும் என்னைப் பித்தனாக்கினார். அவரையே நீளத்
தியானித்துப் போற்றுமாறு செய்தார். இது தகுமோ? அவருடைய
இடுப்பில் விளங்குவது அக்குப்பாசியே. அப்பெருமான் மிழலை
நாட்டிலுள்ள திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
அவருடைய திருமேனியில் நாகமும், கண்டத்தில் நஞ்சும், கரத்தில்
நெருப்பும் விளங்குகின்றன.

     கு-ரை: (பாடுகின்ற) பண்டாரம் - சைவ அடியார். பண்டாரம்
- நிதிநிலை. மத்தம் - பொன்னூமத்தை, (தொழுத என்னை உன்
மத்தம் நீடு செய்வது) தக்கதே - தகுமா? அரை - இடுப்பில்.
திகழ்ந்தது - விளங்குவது. அக்கு அதே - அக்குப்பாசியே. திகழ்ந்தது - திகழ்ந்தென மருவி நின்றது. நாடு சேர் - மிழலை நாட்டைச்
சேர்ந்த, மிழலை ஊரும் - உமது ஊராவதும், மிழலை
வெண்ணிநாட்டிலொன்றுளதாகலின், இங்குக் குறித்தது மிழலை
நாட்டினதென்பார் ‘நாடுசேர்’ என எங்கள் சம்பந்தப் பெருமான்
அருளினார். இதனை, “மிழலை நாட்டு மிழலை, வெண்ணிநாட்டு
மிழலையே” என்ற வன்றொண்டப் பெருந்தகையார் வாக்காலறிக.
(தி.7.ப.12.பா.5.) நஞ்ச - நைந்த. அழல் - விடம். ஐகாரம் சாரியை,
நாகம், ஊரும் - உமது உடம்பில் ஊரும் “நாதன் மேனியில் மாசுணம் ஊருமே” என மேல் முற்பதிகம் ஆறாம் பாடலில் வந்ததூஉம்
காண்க.