4053. தான வக்குலம் விளக்கியே
       தாரகைச் செல விளக்கியே
வான டர்த்த கயிலாயமே
     வந்து மேவு கயிலாயமே
தானெ டுத்தவல் லரக்கனே
     தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே
     மிழலை நற்பதி விருப்பனே.            8

     8. பொ-ரை: சிவபெருமான், பகைத்து நிற்கும் அசுரர் அழிவர்
என்பதை விளக்கியவர். தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின்
ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர். வானை முட்டும்
உயர்ந்த கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான
இராவணனின் பெரிய முடிகளை நெரித்தவர். மனைகள் தோறும்
சென்று பிச்சை எடுத்தலில் விருப்பமுடையவர். திருவீழிமிழலை
என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.

     கு-ரை: தானவர்குலம் - அசுர குலத்தை. விளக்கி - (சிவனைப்
பகைத்த எவ்வலியினோரும் அழிவரென்பதை) விளக்கினீர். தாரகை
- தாரகை முதலாக ஒளிதரும் பொருளெல்லாவற்றின். செலவு - ஒளி
வீசுவதை. இளக்கி - உமது பேரொளியாற் குன்றச் செய்தீர். தாரகை
- உபலட்சணம். இளகுதல் - திண்மை குலைதல். வான் -
தேவர்களை. அடர்த்த - மோதிய. கையில் ஆயம் - கையின்
வலிமை மிகுதியினால். ஆயம் - கூட்டம். இங்கே வலிமையின்
மிகுதியைக் குறித்தது. கயிலாயம் எடுத்த அரக்கன். தடமுடித்திரள்
அரக்கனே - பெரிய தலை யின் கூட்டங்கள் நொறுங்கப் பட்டவன்
ஆனான். மேல் நடைச்செல - (விமானத்திலின்றி) நடையாகச் செல்ல.
இருப்பன் - இருப்பீர். இடவழுமைதி.