4057. |
யாமாமாநீ
யாமாமா யாழீகாமா காணாகா |
|
காணாகாமா
காழீயா மாமாயாநீ மாமாயா. 1 |
1.
பொ-ரை: ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது
பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும்
தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும்
விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின்
பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு
பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள்
காணாவண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும்
திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான
திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை
விடுவிப்பாயாக
கு-ரை:
யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால்.
ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் -
முற்றிலும் தகுவதாகும். (ஏகான்மாவாதிகளை மறுத்தது.) மாயாழீ -
பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. (எம்மிறை நல்வீணை
வாசிக்குமே என்பது அப்பர் திருவிருத்தம்) காமா - யாவரும்
விரும்பத்தக்க கட்டழகனே. காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச்
சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட. நாகா -
பாம்புகளையுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே.
(காமனை
யுருவழித்தவனே.) சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா -
சீகாழிப் பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக்
கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும்
தொக்க தொகை) நாரணன்காண் நான்முகன்காண் என்பத
திருத்தாண்டகம். மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய
மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை
ஒருபொருளுங் காட்டாது இருளுருவம் காட்டும், இரு பொருளும்
காட்டாதிது என்னும் திருவருட் பயனாலறிக. (இருண்மலநிலை. 3)
மாயா - வடசொல், உபலட்சணம்.
|