4058. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
 

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.        2

     2. பொ-ரை: வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே.
அடியார்கட்கு அருள் வரும்பொழுது உருவத்திருமேனி
கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும்
தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து
முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி
செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.
துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

     கு-ரை: யாகா - யாகசொரூபியே. யாழீ - யாழ்வாசிப்பவனே.
காயா- அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி
கொள்பவனே. காதா - சங்காரகருத்தாவே. காதுதல் - கொல்லுதல்.
வடசொல். யார் ஆர் - எவரெவருக்கும். ஆ - (பெற்றவள்) ஆகும்.
தாய் ஆயாய் - தாயானவனே. (ஆ + தாய் = வினைத்தொகை)
ஆயா - ஆராய முடியாத. தார் - மாலை. ஆர்ஆயா -
ஆத்திப்பூவாகக் கொண்டவனே. (சிவனுக்குரிய மாலைகளில்
திருவாத்தியும் ஒன்று) தாக ஆயா - காதல் கொண்ட முனி
பத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை யுடையவனே (தாகஆயன்
குளாம்பல், மராடி என்பது போற்கொள்க) காழீயா! யா - துன்பங்கள்
எவற்றினின்றும் கா - எம்மைக் காப்பாயாக.