4059. |
தாவாமூவா
தாசாகா ழீநாதாநீ யாமாமா |
|
மாமாயாநீ
தாநாழீ காசாதாவா மூவாதா. 3 |
3.
பொ-ரை: அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும்
பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே.
எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும்
நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல்
ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும்
எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே.
வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள்
வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின்
வடிவானவனே!
கு-ரை:
தாவா - அழியாத. மூவா - மூப்பில்லாத (என்றும்
இளமையாய் உள்ள) தாசா - தசகாரியத்தால் அடையும் பொருளாக
உள்ளவனே. காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! நீ - எவரும் சஞ்
சரிப்பதற்கு அஞ்சி நீக்குகின்ற, யாமா - நள்ளிரவில் நட்டம்
பயின்றாடும் நாதனே. மா - பெருமை வாய்ந்தவனே! (பண்பாகு
பெயர்) மா - ஐராவணமாகிய யானையின்மேல், யா நீ - ஏறி
வருபவனே! தானாழி - (தான + ஆழி) = கொடையில் கடல்
போன்றவனே. சா - சாவதினின்றும். கா - காப்பாற்றுவாயாக. காசா
- இரத்தினம் போன்ற ஒளியை உடையனே! தா - கேட்டவரங்களை
எல்லாம் தருவாயாக. வா - என் முன் எழுந்தருள்வாயாக. மூ -
எவற்றினும் முன்னே தோன்றிய. வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. தாவா
மூவா இத்தொடர்க் கருத்து. சாவா
மூவாச் சிங்கமே எனச் சிறிது மாறி அப்பர் வாக்கில் வருவது
காண்க.
தசகாரியமாவது:-
தத்துவரூபம்; தத்துவதரிசனம்; தத்துவ
நீக்கம்; ஆன்மரூபம்; ஆன்மதரிசனம்; ஆன்மநீக்கம்; சிவரூபம்;
சிவதரிசனம்; சிவயோகம்; சிவபோகம் என்பன. (சுத்திக்கு நீக்கம்
என்று கொண்டார் இக்குறிப்புரை எழுதினவர்.) யாநம்
- வடசொல்.
மா - இங்கு இரண்டாயிரம் கொம்புகளை உடைய ஐராவணத்தைக்
குறித்தது. தான + ஆழி - தீர்க்கசந்தி. கருணைக்கடல் என்றது
போல் கொடைக்கடல் என்றார். காசா:- மழபாடியுள் மாணிக்கமே
என்ற சுந்தரமூர்த்திகள் வாக்கால் அறிக. வாதம் - காற்று. உப
இலக்கணத்தால் ஏனைய பூதங்களையும் தழுவிற்று. இலக்கணக்
குறிப்பு: மூவாத்தாசா என்று மிக வேண்டியது இயல்பாயிற்று.
காரணம் வருமொழித் தகரம் வடமொழியின் மெல்லோசை உடைத்து
ஆதலின். தாசன் - தத்திதாந்த பதம்.
|