4060. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
  மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.     4

     4. பொ-ரை: என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே.
தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம்
எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள
தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி
முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக!
அருள் புரிவாயாக.

     கு-ரை: நீவா - என்றும் மாறாத. வாயா - உண்மைப்
பொருளானவனே. கா - தாங்கிய. யாழீ - வீணையினையுடையவனே.
வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல்,
காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, வான் - தேவர்கள்.
நோவாவா - துன்பமடையாவாறு. மேரா - மேரு மலையை
ஏந்தியவனே. காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே.
காயா - ஆகாய சொரூபியே. வாவா நீ - நீ விரைந்து வருவாயாக.
வாய் - உண்மை. காயாழி - வினைத்தொகை. வான் நோ நல்ல
பாம்பு என்பதைப்போல. வான் - கொடுமையின் மிகுதி என்னும்
பொருளில் வந்தது. காயா - முதற்குறை. வாவா - அடுக்கு; விரைவுப்
பொருட்டு.