4062. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
  யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.    6

     6. பொ-ரை: மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த
காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை
உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர்
முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ்
உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை
வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்
கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

     கு-ரை: மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன்
போகாமல். தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். காலாலே -
காலினாலே. கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே.
ஏல் -பொருந்திய. நால் - சனகர் முதலிய நால்வருக்கும். ஆகி -
குருவாகிய. ஆல் - கல்லால மரத்தில். ஏலா - ஏற்றவனே. காழீதே -
சீகாழியிலுள்ள தெய்வமே. மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு
வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக்
கொண்டருளியவனே. போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில்
ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?