4063. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
  நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.        7

     7. பொ-ரை: உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை
உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே
வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த
நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின்
உட்பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும்
துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?

     கு-ரை: நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத மாநீ (மானீ) -
உமா தேவியை உடையவனே. ஏயா - ஒப்பற்ற. மாதா - தாயே. ஏழீ
-ஏழிசை வடிவாய் உள்ளவனே. காநீதானே - நீயே வலியவந்து
என்னைக் காப்பாயாக. நே - அன்பார்ந்த இடத்தை. தாநீ - இடமாக
உடையவனே. காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத
சொரூபியே. மாய் - எம்மைக்கொல்லும். ஆநீ - துன்பங்களை. நீ
மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? மான் - மானைப்போன்றவர்.
மாநீ - மானை உடையவன். ஏழீ - ஏழ்கொதைக் குறிப்பாக இசைய
உணர்த்தியது. “ஏழிசையாய் இசைப்பயனாய்” சுந்தரமூர்த்திகளின்
வாக்கினாலும் அறிக. காநீதானே - ‘அழையாமே அருள் நல்குமே’
என்னும் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் நம் அடிகளார் கூறினமை
காண்க. தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக்
கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்.