4071. மண்ணினா ரேத்த வானுளார் பரச
       வந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட
     முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தா
     ரேந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங்
     கழுமல நகரென லாமே.                4

     4. பொ-ரை: மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி
வணங்கவும், வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும், பிரமன்,
திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி, எல்லாவற்றையும்
ஆக்கியருளியவரும், பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இறைவனின் திருவடி
மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும், செவ்விய
அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது
ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும், காணுந்தோறும்
இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர்
எனக் கூறலாம்.

     கு-ரை: பரச - துதிக்க. அமரர் - தேவர். வானுளோர் அவர்
ஒழிந்த பிரம விட்டுணுக்கள் முதலியோர்.