4076. அருவரை பொறுத்த வாற்றலி னானு
       மணிகிளர் தாமரை யானும்
இருவரு மேத்த வெரியுரு வான
     விறைவனா ருறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ண
     மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங்
     கழுமல நகரென லாமே.                9

     9. பொ-ரை: கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய
ஆற்றலுடைய திருமாலும், அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருவரும் இவ்வுலகில் வாழ
இயலா வண்ணம், பேரூழிக் காலத்தில் பெருவௌள்ம் பெருக்கெடுக்க,
அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில்
கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு
வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம்.

     கு-ரை: அருவரை - கோவர்த்தனமலை. கருவரை - கரிய
மலை போன்ற மலை - அன்மொழித் தொகை.