| 
         
          | 4079. | புள்ளித்தோ 
            லாடை பூண்பது நாகம் |   
          |  | பூசுசாந் 
            தம்பொடி நீறு கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டங்
 காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
 அள்ளற்கா ராமை யகடுவான் மதிய
 மேய்க்கமுட் டாழைக ளானை
 வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில் வீழி
 மிழலையா னெனவினை கெடுமே.         1
 |       1. 
        பொ-ரை: சிவபெருமான் புலித்தோல் ஆடை உடுத்தவர். பாம்பை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் திருநீற்றைப்
 பொடியாகப் பூசியவர். சுடுகாட்டில் கொள்ளி நெருப்பை விளக்காகக்
 கொண்டு பூதகணங்கள் சூழக் காளியுடன் நடனம் புரிந்தவர். சேற்றில் விளங்கும் ஆமையின் 
        வயிறு போன்ற சந்திரனும், யானையின்
 கொம்புபோன்ற தாழையும் விளங்கும் சோலைகளையுடைய
 திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
 அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் கெடும்.
       கு-ரை: 
        ஆமையின் வயிறு சந்திரனையும், தாழம்பூ யானைக் கொம்பையும் ஒக்கும் எனக் கூறிய உவமை நயம் அறிந்து
 மகிழத்தக்கது.
 |