4083. கூசுமா மயானங் கோயில்வா யிற்கட்
       குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
     பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
     மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழிற்றேன் றுவலைசேர் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        5

     5. பொ-ரை: எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற
மயானத்தில் பெரிய வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப், பார்வதிபாகராய், ஆடுகின்ற பாம்பை
இடுப்பில் அணிந்து விளங்குபவர், சிவபெருமான். அவர் நறுமணம்
கமழும் புன்னை, முல்லை, செங்கழுநீர் மலர் ஆகிய மணங்கமழும்
மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து தேன்துளிகள்
சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார். அப் பெருமானின்
திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.

     கு-ரை: கூசும் - எவரும் அடைவதற்குக் கூசுகின்ற. குடவயிறு
-குடம் போலும் வயிறு.