| 
         
          | 4084. | பாதியோர் 
            மாதர் மாலுமோர் பாகர் |   
          |  | பங்கயத் 
            தயனுமோர் பாலர் ஆதியாய் நடுவா யந்தமாய் நின்ற
 வடிகளா ரமரர்கட் கமரர்
 போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
 பூசுரர் பூமக னனைய
 வேதியர் வேதத் தொலியறா வீழி
 மிழலையா னெனவினை கெடுமே.        6
 |        6. 
        பொ-ரை: இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர். திருமாலும், பிரமனையும்
 தம்பாகமாகக் கொண்டு ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர். அவர்
 உலகத் தோற்றத்திற்கும், நிலைபெறுதலுக்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த
 காரணராய் விளங்கும் தலைவர். தேவர்கட்குக் கடவுள். மலரணிந்த தலையையுடைய புரூரவச் 
        சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்
 பெற்றுப் பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி
 இடையறாது ஒலிக்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருநாமத்தை ஓத
 வினையாவும் நீங்கும்.
       கு-ரை: 
        பாதியோர் மாதர் - உடம்பிற் பாதியில் ஒரு பெண்ணையுடையவர். மாலுமோர் பாகர் பங்கயத்தனுமோர் பாகர்
 என்றது ஏகபாத திரிமூர்த்தி வடிவம். புரூரவா: சந்திரகுலத்து அரசன்;
 பாண்டவர் முன்னோன். இங்கு அவன் திருப்பணி செய்த வரலாறு
 கூறுகிறது. இவ்வாறே கோச் செங்கட்சோழர் திருப்பணி
 முதலியவற்றைக் கூறுதல் மேற்காண்க.
 |